கண்டியில் பாராளுமன்ற முறைமையுடன் பிரஜைகளை ஈடுபடுத்துவதற்கான திறந்த பாராளுமன்ற செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமையுடன் பிரஜைகளை ஈடுபடுத்துவதற்கான திறந்த பாராளுமன்ற செயலமர்வு மூன்று நாட்களாக கண்டியில் இடம்பெற்றது.

ஜனநாயக எண்ணக்கரு, பாரளுமன்றத்தின் வகிபங்கு, பணிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் தொடர்பில் திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவின் ஊடாக பல்வேறு சமூகத்தினருக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதுடன், பிரதிநிதித்துவ ஜனநாயகம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நிலைபேறான நம்பிக்கை மற்றும் உந்துதலை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த செயலமர்வு ஜூலை 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று தினங்களிலும் கண்டி ஓக் ரே ரிஜன்ஸி ஹோட்டலில் இடம்பெற்றதுடன், 15 ஆம் திகதி இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் பாராளுமன்றப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜூலை 16 ஆம் திகதி வர்த்தக சமூகத்தினர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கண்டி மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இதன்போது இலங்கை பாராளுமன்றத்தின் திறந்த வகிபங்கு, சட்டங்களை நிறைவேற்றுதல், குழு முறைமை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஜூலை 17 ஆம் திகதி கண்டி மாவட்டத்தின் மாணவர் பாராளுமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ – மாணவிகளை அடிப்படையாக் கொண்டு செயலமர்வு இடம்பெற்றது. செயலமர்வு இடம்பெற்ற மூன்று நாட்களும் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க இணைந்துகொண்டதுடன், வருகை தந்த தரப்பினருடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செயலமர்வில் இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ ஜே.சீ. அலவத்துவல, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ ரோஹன பண்டார, கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் கௌரவ குணதிலக ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான ஜனகாந்த சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன