*உமா ஓயா நீர் மின் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்..

உமா ஓயா நீர்மின் திட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், நீர்த்தேக்கம் மற்றும் தலா 60 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்களின் ஆய்வுக்குப் பின்னர் இந்த ஆண்டு இறுதியில் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக, வார இறுதியில் மொனராகலை, அம்பாறை மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கான விஜயத்தின் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன ஈரானிய தூதுவர் மற்றும் FARAB நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி நிமா நிக்டலை (07) அலரி மாளிகையில் சந்தித்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு ஆய்வுக் குழுக்கள் இரண்டு மாதங்களுக்குள் உமா ஓயா நீர்மின் திட்டத்தை ஆய்வு செய்யவுள்ளதுடன், மின்சார உற்பத்தி மற்றும் நீர்ப்பாசனத்திற்கான நீரை வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க முடியும் என்று நிமா நிக்டெல் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் 120 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், 50,000 ஏக்கர் உலர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்க 145 மில்லியன் கன மீட்டர் நீரை வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. உமா ஓயாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பதுளை வரை கொண்டுசெல்லப்படவுள்ளதுடன் தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளது.

ஈரான் தேயிலை மற்றும் மசகு எண்ணெய் வர்த்தகம் செய்யும் பண்டமாற்று வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்டுத்தியமை குறித்து தூதுவர் அஷ்ஜசாதே தனது பாராட்டுகளை தெரிவித்தார். இது அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய தாராளமான ஆதரவு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அளித்து வரும் உதவிக்கு ஈரான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் ஈரான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் தூதரகப் பிரிவின் தலைவர் கே. சொஹைல் மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன