இலங்கையில் சகல வணிகங்களும் QR குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் – விசேட குழு பரிந்துரை

இணையத்தளம் வழியாக இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான சில வணிகச் செயற்பாடுகளால் அரசாங்கத்துக்கு எவ்வித வருமானமும் கிடைப்பதில்லையென்றும், இதன் காரணமாக இந்நாட்டில் உள்ள சகல வணிகங்களையும் ஒரு கட்டமைப்பின் கீழ் பதிவு செய்வதற்கான பொறிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ மதுர விதானகே தெரிவித்தார்.

இலங்கையின் வணிகத் தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் கூடியபோது அதற்குத் தலைமைதாங்கி கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வணிகப் பதிவு செய்யும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் இந்தச் செயற்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அரசாங்க ஊழியர்கள் மத்தியில் தொழில்முனைவு மனப்பான்மையை உருவாக்குவதன் மூலம் மிகவும் பயனுள்ள சேவையை பெற முடியும் எனக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்களை ஒழுங்காகவும் நியாயமாகவும் பணியமர்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

பிரதேச செயலகக் கட்டமைப்பில் உள்ள  சில குறைபாடுகள் காரணமாக வழங்கப்படும் சேவைகளின் வினைத்திறன் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் அரசாங்க ஊழியர்கள் ஒரே முறையின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தை குழுவில் ஆஜராகியிருந்த அரசாங்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதற்கு இந்நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவது இன்றியமையாதது என்றும், அரசாங்கப் பொறிமுறையை வினைத்திறனாக்குவதன் மூலம் மக்களுக்கு உயர்தர மற்றும் நட்புறவான சேவையை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன், அரசியலமைப்புக்குள் உப பிரிவாக அல்லது அந்தந்த அமைச்சுக்கள் பெயரிடப்பட்டால் அவற்றின் நீண்டகால, மாறாத தீர்மானங்களை எடுக்கமுடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதேநேரம், பல்வேறு திறமைகளைக் கொண்ட அரசாங்க அதிகாரிகளை அரசாங்க சேவைக்கு இணைத்துக் கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வணிகப் பதிவு நடவடிக்கைகளை ஒரு மணி நேரத்திற்குள் பூர்த்தி செய்யக் கூடிய திறமையான முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனக் குழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கு அமைய இலங்கையில் உள்ள அனைத்து வணிகங்களும் QR குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் குழு பரிந்துரைத்தது.

குறிப்பிடப்படாத வகையில் செயற்படும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கக் கூடிய நடவடிக்கை  அரசாங்க நிர்வாகச் செயற்பாட்டிற்கு உட்பட்டதாக இடம்பெறுகிறதா எனக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அல்லது தாபன விதிக் கோவை போன்றவற்றின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் குழுக் கூட்டத்தில்,  இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ மொஹமட் முஸ்ஸம்மில், கௌரவ கோகிலா குணவர்தன ஆகியோரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன