அரசாங்க சேவையை மிகவும் வினைத்திறன் மிக்கதாக….

அரசாங்க சேவையை மிகவும் வினைத்திறன் மிக்கதாகவும், பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்லவும், ஒட்டுமொத்த நிறுவன மற்றும் அரசாங்கத்தை திறந்த மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்லக் கூடிய வழிகாட்டல் முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கு நிபுணர்களை உள்ளடக்கிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத்குமார சுமித்திராரச்சி தலைமையில் கூடியபோதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசாங்க சேவை மற்றும் அரசாங்க ஊழியர்கள் மிகவும் உகந்த, மக்கள் சார்ந்த அரசாங்க சேவையை உருவாக்குவதற்கும், ஜனநாயகம், நல்லாட்சி,செயலாற்றுகை,மனமுவந்த தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை உறுதிப்படுத்தக்கூடிய அரசாங்க சேவையை உருவாக்குது தொடர்பில் முன்மொழிந்து, தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய வழிகாட்டல்களைத் தயாரிப்பதற்கு இவ்வாறு புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட உபகுழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்த உபகுழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 21 பேர் உள்ளடங்குகின்றனர். இதற்கு அமைய இந்த உபகுழுவின் தலைவராக துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உபகுழுவில் நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்,பொதுநிர்வாக நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எச்.டி.கருணாரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனிசிமா,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் பொருளாதாரக் கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜானக பெர்னாண்டோ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.கே.எஸ்.ரத்நாயக்க, ஊடகவியலாளர் அசோக டயஸ் (சிரச ஊடக வலையமைப்பு), பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பின் தலைவர் மஞ்சுள கஜநாயக்க, சர்வோதய இயக்கத்தின் தலைவரும், இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான வைத்தியகலாநிதி வின்யா ஆரியரத்ன, குழுவின் தலைவரின் ஆலோசகர் கலாநிதி கே.எ.திலகரத்ன ஆகியோர் அடங்குகின்றனர்.

இதேவேளை, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தேச பதவியணி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பல தடவைகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதை நினைவுபடுத்திய குழுவின் தலைவர், இப்பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்குமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில்,ஓய்வூதிய பங்களிப்பு வழங்குவதில் உள்ள பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.  இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி அனைத்துத் தரப்பினருக்கும் இறுதித் தீர்மானம் வழங்குமாறும் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன்சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒப்சன் மாற்றங்கள் செய்வது தொடர்பில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையின் படியே செயற்படுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இவ்விடயத்தில் காணப்படும் நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க எழுத்துமூலம் இணக்கப்பாட்டை வழங்குவதாக சமுர்த்தி திணைக்களமும், நிதி அமைச்சும் இணக்கம் தெரிவித்தன. இந்த எழுத்துமூல இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றதும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்தது.

ஓய்வுபெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய குழுவின் தலைவர், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்க முடியும் என்பதை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் பரிந்துரைத்தார்.

இவ்விடயத்தில்,தீர்வொன்றை வழங்கும்போது மனிதாபிமான பக்கத்தையும் கருத்தில் கொண்டு தீர்வொன்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். ஓய்வூதியம் பெறும் சமுர்த்தி அதிகாரிகளிடம் அறவிடப்படும் வட்டி குறித்த சுற்றுநிருபத்தை தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

சமுர்த்தி உத்தியோகத்தர்களால் வைப்பிலிடப்படும் ஊழியர் நம்பிக்கை நிதியை ஓய்வூதியமாக மாற்றுவதற்கு 4% வரி அறவிடுவது குறித்தும் குழு கலந்துரையாடியது. அதற்கமைய, இப்பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் தீர்வை வழங்க வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார். மேலும்விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்தின் நிலுவைத் தொகைக்கு 4% கூடுதல் வட்டி வசூலிப்பது பொருத்தமற்றது என்பதும் குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன